இந்த இணையதளத்திற்கு வருகை தரும் உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ

Saturday 30 June 2012

பராஅத் இரவு


நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தராத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள், வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாக கூறப் பட்டுள்ளது தான் வேடிக்கை.
பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?
ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100 ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.
(இச்செய்தி ஷாபி மத்ஹபின் 'இஆனதுல் தாலிபீன்' என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது)
மக்களிடம் அறிமுகமான ஷஃபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப் பட்டவைகளாகும்.
(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுத் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.)
பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் 'பஹ்ருர் ராஹிக்' என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப் பட்டுள்ளது.
மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்று வதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும்  பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ? அல்லாஹ் இவர்களை காப்பாற்றுவானாக!
பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ''ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.
(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)
ஏன் இந்த சிறப்பு?
அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? அன்று தான் ஷஃபான் பிறை 15ல் வரும் பராஅத் இரவாம். அந்த இரவை புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கிவித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள்.
இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா?பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான். அது மாத்திரமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி.
மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? அவனால் குர்ஆனை தெளிவுபடுத்த அனுப்பப் பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா? அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.
பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப் பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீன மானவை அல்லது இட்டுக்கட்டப் பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப் பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.
முதல் ஆதாரம்
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம்.அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன. (அல்குர்ஆன் 44:2லி4) 
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு தான் என்பது தான் இவர்களின் வாதம். திருக்குர்ஆனை பொறுத்தமட்டில் ஒரு வசனத்தின் விளக்கத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு        எது? என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 97:1)
அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமலான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும்.நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)
இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமலான் மாதத்தில் உள்ள லைத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத்தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும்  வசனத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
இரண்டாம் ஆதாரம்
ஷஃபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள்.அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன்.  சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: இப்னுமாஜா 1378
இது ஆதாரபூர்வமான ஹதீஸல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் 'இப்னு அபீ ஸப்ரா' என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.
மூன்றாம் ஆதாரம்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம்  15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங் களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: திர்மிதி 670
இந்த ஹதீஸும் ஆதாரப் பூர்வமானது அல்ல என்பதே உண்மை.  இதில் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் 'உர்வா' விடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தை பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
நான்காவது ஆதாரம்
நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதை போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான்.
அறிவிப்பாளர்: அதாஹ் பின் யஸார்,நூல்: முஸன்னப் இப்னு      அபீஷைபா 9764, ஃபலாயிலுர் ரமலான் லி இப்னு அபித் துன்யா
இத்தொடரில் வரும் அதாஹ் பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும்.
ஐந்தாவது ஆதாரம்
ரமலான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் ஷஃபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீநூல்: ஃபலாயிலு ரமலான்லி இப்னு அபித் துன்யா 9
இத்தொடரில் வரும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும்.
முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காக
இரண்டாவது யாசீன் கப்ராளி களுக்கு ஹதியாவாகவும், உயிர் நீடிப்பிற்காகவும்
மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.
அது மாத்திரமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும் இஷா தொழுகை அன்றிரவு மாத்திரம் இரவு 10 மணிக்கு நடைபெறும். காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு சிறந்ததாகப் போச்சு, ஏழு வருடம் படித்த மார்க்க அறிஞருக்கு?
அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும்.எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100 ரக்அத்களாம். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.   
பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள்.
இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததை புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 2697
நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 3243)
எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.
அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவதோடு அதைச் செய்தவர் நரகத்தில் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.
மறுமையை நம்பியவர்களே!உங்களைப் பாவியாக்கும் பராஅத் இரவைத் தூக்கி எறிந்து விட்டு இறைவனாலும் இறைத்தூதராலும் காட்டித் தரப்பட்ட தூய இஸ்லாத்தைப் பின்பற்ற எல்லாம் வல்ல இறைவன் நமக்குத் துணை புரிவானாக!

Sunday 17 June 2012

மிஃராஜ் தரும் படிப்பினை!



கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...
'மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற் காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன். பார்ப்பவன்' (அல்குர்ஆன் 17:1)
விண்ணகப் பயணம் (மிஃராஜ்) அண்ணலாரின் நபித்துவ வாழ்வில் பொன்னைப் போல் ஒளிரும் ஒரு உண்மை நிகழ்ச்சியாகும். இந்த மிஃராஜ் பயணம் வரலாற்றில் எத்தகைய புதுமையையும், புரட்சியையும் தோற்றுவித்தது? எவ்வாறு திருப்பு முனையாக அமைந்தது? என்பதை எண்ணிப்பார்ப்போர் நம்மில் மிகச் சிலரே இருக்கிறார்கள். 'மிஃராஜ்' என்ற பயணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைவிட அங்கே என்ன நிகழ்ந்தது என்பது தான் முக்கியம். நாம் வாழுகின்ற இந்த பூமி அல்லாஹ்வின் ஆட்சிக்கு உட்பட்ட மிகச்சிறிய எல்லையாகும். இந்த பூமியின் பிரதிநிதிகளாக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் உள்ளனர்.
ஒரு ஆட்சியின் கீழ் உள்ள பிரதிநிதிகளுக்கு ஏனைய சாதாரண மக்களுக்கு தெரியாத சில அரசின் உயர் விவகாரங்கள் காண்பிக்கப்படுவது போன்று வல்ல இறைவனும் தனது இப்புவியின் பிரதிநிதிகளான தூதர்களுக்கு தனது சில அற்புதங்களை காண்பிப்பதென்பது வியக்கத்தக்கதல்ல. இதற்குச் சான்றாக நபி இபுராஹீம் (அலை) அவர்கள் உறுதியான நம்பிக்கையாளராக ஆகுவதற்காக  வானம் மற்றும் பூமியின் சான்றுகளை அல்லாஹ் காட்டியதாக அல்குர்ஆனில் (6:75)இல் கூறப்படும் விஷயத்தையும், 'இறந்தபின் எவ்வாறு எவ்வாறு நீ உயிர்ப்பிக்கின்றாய்' என்று நபி இபுராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டபோது, பறவைகளை நான்கு துண்டுகளாக வெட்டி நான்கு திசைகளில் வைத்து அதனை அவர்களிடம் அழைக்குமாறு கூறி உயிர்ப்பித்துக் காட்டடியதாக கூறும் அல்குர்ஆனின் (2:260)வது வசனமும் இறைவனின் அற்புதங்களுக்கு சான்றாகக் கொள்ளலாம்.
மிகச்சிறந்த இறைத்தூதர்களில் ஒருவரான மூஸா(அலை) அவர்களை இறைவன் தூர் மலைக்கு அழைத்து அவர்களுடன் உரையாடியதாக கூறப்படும் அல்குர்ஆனின் (28:29,30)வது வசனமும், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டு தனது விருப்பத்திற்கேற்ப இப்பிரபஞ்சத்தில் எவ்வாறு சில பிரச்சனைகள் நடைபெறுகின்றன என்பதை தனது அடியார்களில் ஒருவர் மூலம் மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்தியதாகக் கூறப்படும் அல்குர்ஆனின் (18: 65,66) வது வசனங்களும்கூட இவைகளுக்குச் சான்றுகளாகும்.
அண்ணலாரின் வாழ்விலும் இதே போன்று சில விந்தையான அனுபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு முறை இறைவனுக்கு மிக நெருக்கமான வானவர் ஒருவரை அவரது உண்மையான வடிவத்தில் அடிவானத்தில் கண்டார்கள்.
இது மரியாதைக்குரிய தூதரின்(ஜிப்ரீலின்) சொல்லாகும். (அவர்)வலிமை மிக்கவர். அர்ஷ{க்கு உரியவனிடத்தில் தகுதிபெற்றவர். வானவர்களின் தலைவர்: அங்கே நம்பிக்கைக்குரியவர். உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். அவரை(ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் பார்த்தார். (அல்குர்ஆன் 81:19-23)
மேலும், அதே வானவரை ஆன்மீக உலகின் துவக்கமான 'ஸிதரத்துல் முன்த்தஹா' எனும் இடத்திலும் அவரது இயல்பான வடிவத்தில் இன்னொரு முறை வெகு அருகில் கண்டார்கள்.
அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? 'ஸிதரத்துல் முன்த்தஹாவுக்கு' அருகில் மற்றொரு தடவையும் அ(வ்வான)வரை இறங்கக் கண்டார். (அல்குர்ஆன் 53:12,13,14)
அண்ணலாரின் விண்ணேற்றப் பயணமும் அவர்களுக்கு நிகழ்ந்த இது போன்ற அதிசயிக்கத்தக்க அனுபவங்களில் ஒன்றுதான்! இந்த பயணம் அண்ணலாருக்குச் சில விந்தைகளையும், அற்புதங் களையும் காண்பிப்பதற்காக மாத்திரமில்லாமல், அவர்களிடம் சில முக்கியமான பணிகளை ஒப்படைக்கப் படுவதற்காகவும் சில வழிகாட்டுதல்களை அருளப் படுவதற்காகவும் நிகழ்ந்தது.
நபி மூஸா(அலை) அவர்களை 'தூர்' மலைக்கு அழைக்கப்பட்டு 'பத்து கட்டளைகள்' தரப்பட்டதுடன், ஃபிர்அவ்னிடம் 'இறைவனின் விருப்பத்திற்கேற்ப உனது ஆட்சியை சீர்படுத்திக்கொள்' என்று கோரிக்கை விடவும் கட்டளையிடப்பட்டது.
இதேபோன்றுதான் அண்ணலாரின் இந்த பயணமும் அவர்களின் நபித்துவ வாழ்வின் மிக முக்கியமான கட்டத்தில் நிகழ்ந்திருந்தது. அண்ணலாரின் குரல் அரபு நாடுகளைக் கடந்து ஏனைய நாடுகளிலும் எதிரொலிக்கப் போகிறது. இஸ்லாமிய இயக்கத்தின் தலைமையகம் வேறொரு இடத்திற்கு மாறப் போகிறது. எனவேதான் இந்த மிக முக்கியமான கட்டத்தில் அண்ணலாரை தன்பால் அழைத்துச் சில வழிகாட்டுதல்களை வழங்கிட இறைவன் இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்தான். இதைத்தான் நாம் 'மிஃராஜ்' என்கிறோம் இந்தப் பயணம் அண்ணலாரின் மதீனத்து பயணமாகிய ஹிஜ்ரத்துக்குச் சற்றே குறைய ஒரு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்வுற்றது.
இந்த பயணத்தில் உள்ளடக்கமாக இருக்கும் சில குறிப்பிட்ட சம்பவங்களாவன: 1. அல்அக்ஸா ஆலயம் சென்று அங்கு தொழுகை நிறைவேற்றுதல்!       2. வானுலகின் பல்வேறு படித்தரங்களையும் கடந்து செல்லுதல்! 3.முந்தைய திருத்தூதர்களைச் சந்தித்தல்! 4. பயணத்தின் இறுதிக் கட்டத்தைச் சென்றடைதல்! போன்ற சம்பவங்கள் மாத்திரமே நபி மொழிகளில் குறிப்படப் பட்டுள்ளன. ஆனால் அல்குர்ஆனோ 'மிஃராஜ்' எவ்வாறு நிகழ்ந்தது? என்பதைப்பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அண்ணலார் ஏன் அங்கு அழைக்கப் பட்டார்கள் என்பதை மாத்திரமே மிக விரிவாக விரிந்துரைக்கிறது.
இதுபற்றி அல்குர்ஆனின் 17வது  அத்தியாயம் விரிவாக எடுத்துரைக்கின்றது. அந்த விரிவுரை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதன் ஒரு பிரிவில், 12 ஆண்டுகளாக அண்ணலாருக்கும், அவர்களின் இயக்கப் பணிகளுக்கும் சொல்ல முடியாத இடையூறுகள் தந்த மக்கத்து வாசிகளுக்கும், அண்ணலார் வெகு விரைவில் சந்கிக்கவிருக்கும் மதீனா வாசிகளான இஸ்ரவேலர் களுக்கும் இறுதி எச்சரிக்கைகள் விடப்படுகின்றன.
(முஹம்மதே!) உம்மை இப்பூமியிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர். அப்போது உமக்கு பின்னர் அவர்கள் குறைவாகவே தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன் 17:76)
பூமியில் இரண்டு தடவை குழப்பம் செய்வீர்கள்! பெருமளவுக்கு ஆணவம் கொள்வீர்கள்! என்று இஸ்ராயீலின் மக்களுக்கு அவ்வேதத்தில் அறிவித்தோம். அவ்விரண்டில் முதல் வாக்கு நிறைவேறும் போது கடுமையான, பலமுடைய நமது அடியார்களை உங்களுக்கு எதிராக அனுப்பினோம். அவர்கள் வீடுகளுக்குள்ளேயும் ஊடுருவினார்கள். அது செய்து முடிக்கப்பட்ட வாக்குறுதியாக இருந்தது. பின்னர்  அவர்களுக்கு எதிராக உங்களுக்கு வாய்ப்பளித்தோம். செல்வங்களாலும், ஆண் மக்களாலும் உங்களுக்கு உதவினோம். உங்களை அதிக எண்ணிக்கை யுடையோராக ஆக்கினோம். நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்கின்றீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே. இரண்டாவது வாக்குறுதி நிறைவேறிய போது அவர்கள் உங்களுக்குக் கேடு செய்தார்கள். (பைத்துல் முகத்தஸ் எனும்) பள்ளியில் முன்பு நுழைந்தது போன்று நுழைந்தார்கள். அவர்கள் ஆதிக்கத்தில் வந்தவற்றை அழித்தொழிந் தார்கள். உங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிவான். நீங்கள் மீண்டும் (பழைய நிலைக்கு) திரும்பினால் நாமும் திரும்புவோம். (நம்மை) மறுப்போருக்கு நரகத்தை சிறைச் சாலையாக ஆக்கியுள்ளோம். (அல்குர்ஆன் 17:4,5,6,7,8)
மூஸா நபி, ஈசா நபி ஆகிய இரு தூதர்கள் அனுப்பப்பட்ட இரு வாய்ப்புகளையும் நீங்கள் முறையோடு பயன்படுத்திக் கொள்ளாமல் இறைவனின் சினத்திற்கு ஆளாகி இரண்டு முறை மாபெரும் தண்டனைகளுக்கு ஆளாவீர்கள். இப்போது மூன்றாவதும் கடைசியுமான வாய்ப்பு அண்ணலாரின் வடிவத்தில் நீங்கள் பெருவாரியாக வாழும் மதீனா நகர் நோக்கி வரவிருக்கிறது. இந்த வாய்ப்பையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால், உங்களுக்கு வேறொரு வாய்ப்போ, வழியோ பிறக்கப் பேவதில்லை என்றும், இறைவனின் மிகப் பெரும் தண்டனைக்கு ஆளாவீர்கள் என்றும் இஸ்ரவேலர்களுக்கு இந்த வசனங்கள் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அந்த விரிவுரையின் மற்றொரு பிரிவில் மனித இனத்தின்; பண்பாடுகளையும், அவர்களின் பழக்க வழக்கங்களையும் புடம்போட்டு அவர்களைப் புனிதர்களாக மாற்றும் பதினான்கு அடிப்படைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இக்கருத்தினை அல்குர்ஆனின் 17ம் அத்தியாயத்தின் 23 முதல் 37 வரை வசனங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
1.பெற்றோர்களிடம் நன்றியாக நடந்து கொள்ளுதல்!
என்னைத்தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! 'சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல், இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!' என்று கேட்பீராக. (17:23,24)
2.  கூட்டுவாழ்க்கையில் உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாயிருத்தல்!
3. ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் உதவியாயிருத்தல்!
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர் (17:26)
4.  இறைவன் வழங்கிய செல்வத்தை வீண்விரயம் செய்யாதிருத்தல்!
விரயம் செய்வோர் ஷைத்தான்தளின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (17:27)
5.   செல்வத்தை செலவிடுதலில் கஞ்சத்தனமோ, ஊதாரித்தனமோ இல்லாமல் நடுநிலைமையை  கையாளுதல்!    
உமது கையைக் கழுத்தில் கட்டப்பட்டதாகவும் ஆக்காதீர்! ஒரேயடியாக அதை விரித்தும் விடாதீர்! (அவ்வாறு விரித்தால்) இழிவடைந்தவராக வறுமைப்பட்டு அமர்ந்து விடுவீர்! (17:29)
6.  இறைவன் செய்திருக்கும் இயற்கையான வழிமுறைகளுக்கு இடையுறு செய்யாதிருத்தல்!
தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (17:30)
7.  வாழ்க்கைச் சிரமங்களுக்கு அஞ்சி மக்கள் தம் குழந்தைகளைக் கொல்லாதிருத்தல்!
வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும். (17:31)
8 விபச்சாரம் மற்றும் அதனைத் தூண்டும் காரியங்களுக்கு அருகிலும் செல்லாதிருத்தல்!
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.(17:32)
9.  ஒவ்வொரு மனித உயிரும் புனிதமானது. ஆதலால் நியாமின்றி அதனைக் கொல்லாதிருத்தல்!
அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்! அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார். (17:33)
10. அனாதைக் குழந்தைகளின் பொருளை பாதுகாத்தல் அநாதைக் குழந்தைகள் பருவம் அடைந்து தம்மைத் தாமே சுயபரிபாலனம் செய்து கொள்ளும் வரை அவர்களின் பொருளுக்குப் பாதுகாவலாயிருத்தல்!
 அநாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! (17:34)
11.  வாக்குறுதிகளையும், ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுவதில் மிகக் கவனாமாயிருத்தல்!
வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும். (17:34)
12 அளவை நிறுத்தல்களிலும், கொடுக்கல் வாங்கல்களிலும் நேர்மையைக் கடைப்பிடித்தல்!
அளக்கும் போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது. அழகிய முடிவு. (17:35)
13.  தீர்க்கமாக தெரியாதவரையில் சந்தேகமான விஷயங்ளின் அடிப்படையில் செயல்படாதிருத்தல்!
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.(17:36)
14. ஆணவமோ, மமதையோ, கர்வமோ கொள்ளாதிருத்தல்!
பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! (17:37)
இந்தப் 14 அறிவுரைகளும் அன்னலாரின் இயக்கம், பிரச்சாரக் கட்டத்தைக் கடந்து அரசியல்-ஆட்சி அதிகாரம் என்ற கட்டதை அடைவதற்காக் அடியெடுத்து வைக்கப் போகும் தருணத்தில் அதற்கான அடிப்படைகளாகத் திகழ்கின்றன. எனவேதான் இப்போதனைகள் அண்ணலார் காணப் போகும் சமூக அமைப்புக்கான 'மினி அமைப்பு நிர்ணயச் சட்டம்' போன்று அமைந்து விட்டிருக்கின்றன. இவைகளுடன் அண்ணலாரின் விண்ணகப் பயணத்தின் போது, முஸ்லிம்கள் அனைவருக்கும் ஐங்காலத் தொழுகைகளையும் இறைவன் கட்டாயக் கடமையாக்கினான்.
சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப் படுவதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 17:78)
எவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட அந்தப் 14 ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் ஒரு சமூக அமைப்பை உருவாக்கப் புறப்பட்டு விட்டனரோ அவர்கள், தமது செயல், எண்ணங்களுக்காக அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டியவர்கள் என்பதை தினமும் ஐந்து தடவை (தொழுகையில்) மறந்து விடாமல் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இறையச்சமுடைய மனிதர்களால் தான் அண்ணலாரின் விண்ணகப் பயணத்தின் போது அருளப்பட்ட அந்தப் 14 ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பை உருவாக்கிட முடியும். வல்ல அல்லாஹ் அத்தகைய இறையச்சத்தையும், மனத்துணிவையும், உளத் தூய்மையையும் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.

மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்



இந்தப் பூமியில் மனிதன் ஏராளமான பாவங்களைச் செய்கிறான். அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வைப் பயந்து நல்லவனாக வாழ்வதற்காக, அவனது பாவங்களுக்குத் தண்டனை இருப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் நமக்குத் தெளிவு படுத்தியுள்ளனர்.

இவ்வாறு மனிதன் செய்யும் பாவங்களில் சில சிறியவையாகவும் சில பாவங்கள் மிகப் பெரியவையாகவும் அமைந்துள்ளன. பெரிய பாவங்கள் எவை? என்பதை அதற்குரிய தண்டனைகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். இந்த வகையில் மிகப் பெரும் பாவங்களில் உள்ளவையாகக் கருதப்படும் சில குற்றங்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் தண்டனை அவன் நம்மைப் பார்க்காமலும் நம்மிடம் பேசாமலும் நமது பாவக் கறைகளைச் சுத்தம் செய்யாமலும் இருப்பதாகும். இவர்களைப் பற்றி அல்லாஹ் தனது திருக்குர்ஆனில்
அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப் படுவார்கள் என்று குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 83:15)

கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு (அல்குர்ஆன் 2:174)

''மறுமை நாளில் நல்லவர்கள் அனைவரும் அல்லாஹ்வை கண் கூடாகக் காண்பார்கள். பௌர்ணமி நிலவை நாம் எப்படி அனைவரும் கண்கூடாகப் பார்க்கிறோமோ அது போன்று அல்லாஹ்வைக் காண்போம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அறிவிப்பாளர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ர­), நூல்: புகாரீ 7435

அல்லாஹ்வைப் பார்ப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல. மிகப்பெரிய பாக்கியம்.
சொர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழையும் போது, ''இன்னும் உங்களுக்கு நான் எதையாவது அதிகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?'' என்று அல்லாஹ் கேட்பான். ''நீ எங்களை நரகத்தி­ருந்து காப்பாற்றி சுவர்க்கத்தில் நுழையச் செய்ய வில்லையா? எங்கள் முகங்களை நீ வெண்மையாக்கவில்லையா?'' என்று சுவர்க்கவாசிகள் கூறுவார்கள். பிறகு அல்லாஹ் திரையை அகற்றுவான். அல்லாஹ்வை அவர்கள் காண்பதை விட அவர்களுக்கு விருப்பமானதாக வேறு எதுவும் இருக்காது.அறிவிப்பாளர்: ஸுஹைப் (ர­)நூல்: முஸ்­ம் 266

அல்லாஹ் திருக்குர்ஆனில் பேச மாட்டான் என்று கூறுவதன் பொருள்நல்ல வார்த்தைகளால் அன்போடு பேச மாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அல்லாஹ் நரக வாசியைப் பார்த்து வேதனையைச் சுவை என்று கூறுவதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
சுவைத்துப் பார்! நீ மிகைத்தவன்; மரியாதைக்குரியவன். நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தது இதுவே (என்று அல்லாஹ் கூறுவான்) (அல்குர்ஆன் 44:49)

இன்னும் கே­ செய்யும் விதமாக அல்லாஹ் நரகவாசியிடம் பேசுவதை குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. மறுமை நாளில் பாவிகளை அல்லாஹ் விசாரிப்பான் என்று பல நபிமொழிகளும் கூறுகின்றன. அல்லாஹ் தூய்மைப்படுத்த மாட்டான் என்றால் பாவத்தி­ருந்து தூய்மைப் படுத்தி குற்றமற்றவர்களாக ஆக்க மாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
குர்ஆனிலும் நம்பத் தகுந்த நபிமொழியிலும் 12 நபர்கள் இந்தத் தண்டனைக்கு உரியவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் மூன்று நபர்கள் பற்றி வரும் செய்திகள் பலவீனமானவை ஆகும்.  மீதமுள்ள 9 நபர்கள் பற்றிய செய்தி ஆதாரப் பூர்வமானதாகும். அவற்றின் விவரத்தைக் காண்போம்.

(1). வேதத்தை மறைத்தவர்கள்
அற்பமான பணத்திற்காக அல்லாஹ்வின் வசனங்களை மக்களுக்கு மறைத்தவர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான். இன்னும் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு (அல்குர்ஆன் 2:174)

இன்றும் பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்தத் தவறைச் செய்து வருகிறார்கள். குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமான எத்தனையோ விஷயங்களைத் தவறு என்று அவர்கள் விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால் அவற்றையெல்லாம் மக்களிடம் கூறினால் தன்னுடைய பொருளாதாரத்திற்குப் பாதிப்பு வந்து விடும் என்று பயப்படுகிறார்கள்.

 உதாரணமாக இன்று சமுதாயத்தில் மவ்லூது, கத்தம், பாத்திஹா போன்ற பித்அத்துகள் அனைத்தும் வருமானத்திற்காகத் தான் ஆ­ம் பெருந்தகைகளால் உருவாக்கப்பட்டன. இவற்றைச் செய்யும் படி அல்லாஹ்வோ அவனது தூதர் (ஸல்) அவர்களோ கூறவில்லை என்பது ஆ­ம்களுக்கு நன்றாகத் தெரியும். நாம் இவற்றுக்கு எதிரான வசனங்களையும் ஹதீஸ்களையும் கூறினாலும் அவர்கள் ஏற்பதற்கு முன் வருவதில்லை.

இவ்வாறு பணத்திற்காக வசனங்களை நாம் மறைத்தால் அல்லாஹ் நம்முடன் பேசாமல் இருப்பதோடு நாம் இவ்வழியில் சம்பாதித்தவற்றை நெருப்பாக மாற்றி உண்ண வைப்பான். கடுமையான இந்தத் தண்டனையை நமது மார்க்க அறிஞர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.
இந்த உலகில் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம். ஆனால் மறுமையில் இதற்கான பதிலை நாம் கூறாமல் அல்லாஹ்விட மிருந்து தப்பிக்க முடியாது. நபிமார்களாக இருந்தாலும் அவர்களையும் அல்லாஹ் விசாரிக்காமல் விட்டுவிட மாட்டான்.

உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம். (அல்குர்ஆன் 15:92)

யாருக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம். (அல்குர்ஆன் 7:6)

இதை ஸஹாபாக்கள் தெளிவாக  விளங்கியிருந்தார்கள். அபூஹுரைரா (ர­) அவர்கள் அதிகமாக ஹதீஸை அறிவிப்பதை சிலர் குறை கூறினர். இக்குறையை அபூஹுரைரா (ர­) அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதாமல், நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட செய்திகளை மக்களுக்குக் கூறினார்கள். மார்க்கத்தை மறைக்கக் கூடாது என்று அவர்கள் எண்ணியதே இதற்கு காரணம்.

மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். (அல்குர்ஆன் 2:159)

இந்த வசனத்தை அபூஹுரைரா (ர­) அவர்கள் சுட்டி காட்டி ''இந்த வசனம் மட்டும் இல்லாவிட்டால் நான் ஒரு ஹதீஸைக் கூட கூறியிருக்க மாட்டேன்'' என்று கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­)நூல்: புகாரீ 118

மார்க்கத்தை மறைப்பது மாபெரும் குற்றம் என்பதால் அக்குற்றத்தைச் செய்யக் கூடாது என்று நமக்கு முன்னர் வேதம் வழங்கப் பட்டவர்களான யூத, கிறித்தவர் களிடத்தில் அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். இந்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆதலால் தண்டனையைச் சம்பாதித்துக் கொண்டார்கள்.

வேதம் கொடுக்கப் பட்டோரிடம், ''அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன் 3:187)

நாம் இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கம் மறுமையில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகத் தான். நாம் தொழுவதும் நோன்பு வைப்பதும் அவ்வுலகில் பலனை அடைவதற் காகத் தான். ஆனால் நாம் மார்க்கத்தை மறைப்போமானால் மறுமையில் நமக்கு எந்தப் பலனும் கிடைக்காது. அல்லாஹ் வேதமுடையோரிடத்தில் செய்த இந்த உடன்படிக்கையை அவர்கள் நிறைவேற்றாத காரணத்தினால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று குர்ஆனில் கூறுகிறான்.

அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:77)

(2). பொய் சத்தியம் செய்து  வியாபாரம் செய்பவன்
இன்று பொய் இல்லாமல் வியாபாரம் கிடையாது என்று கூறும் அளவுக்குப் பொய் வியாபாரத்தில் கலந்து விட்டது. உண்மையைக் கூறி, நியாயமாக வியாபாரம் செய்பவன் பிழைக்கத் தெரியாதவன் என்றும் பொய் சொல்­ ஏமாற்றுபவன் அறிவாளி என்றும் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

நியாயமாக பிழைப்பவனுக்குக் குறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் நிறைவான பரக்கத்தை வழங்குகிறான். அநியாயமாகப் பிழைப்பவனுக்கு நிறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் பரக்கத்தை அழித்து விடுகின்றான்.

விற்பவரும் வாங்குபவரும்  பிரியும் வரை (வியாபாரத்தை முறித்துக் கொள்ளும்) உரிமை படைத்திருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மையைக் கூறி (பொருளின் குறையைத்) தெளிவு படுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் செய்யப்படும். அவர்கள் பொய் கூறி (பொருளின் குறையை) மறைத்தால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் நீக்கப்படும்.அறிவிப்பாளர்: ஹகீம் பின் ஹிஸாம் (ர­),  நூல்:  புகாரீ 2110

வியாபாரிகள் அனைவரும் பொய் சொல்வார்கள் என்பதை மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளார்கள். வியாபாரி  விலை 50 ரூபாய் என்று கூறினால் வாங்குபவர் 30 ரூபாய்க்குத் தாருங்கள் என்று கேட்கிறார். மக்கள் யாரும் அவர்கள் கூறுவது உண்மை என்று நம்பத் தயாராக இல்லை. அந்தளவுக்கு வியாபாரத்தில் பொய்யும் புரட்டும் நிறைந்து விட்டது.

இதைப் போன்று சில நேரங்களில் கூடுதல் இலாபம் பெற வேண்டும் என்பது போன்ற எண்ணத்தில் வாங்குபவரை நம்ப வைப்பதற்காக, கூடுதல் விலை கொடுத்து வாங்கியதாக அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு விற்பவர்கள் இருக்கிறார்கள். வாங்குபவரும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறியதால் நம்பி வாங்கிச் சென்று விடுவார். ஆனால் மறுமையில் இதற்குரிய தண்டனையை வியாபாரி யோசித்துப் பார்ப்பதில்லை.

அல்லாஹ் பார்க்காத பேசாத கடும் தண்டனைக்குரிய நபர்களில்  இவ்வாறு பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்தவனும் ஒருவனாவான்.

மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். (ஒருவன் தன் பொருளை அதிக விலைக்கு) விற்பதற்காக வாடிக்கையாளர் கொடுக்கும் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­)நூல்: புகாரீ 2369

(3).சுயநலத் தொண்டன்
ஒரு இயக்கத்திற்கோ அல்லது ஒரு குழுவிற்கோ நாம் ஒருவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பொது நலனை கருத்தில் கொண்டு ஏற்க வேண்டும்.  நியாயமானவராகவும் நாணயமான வராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும். தனக்குச் சாதகமாக நடக்கும் நபரைத் தேர்வு செய்யக் கூடாது.

ஆனால் இன்று பெரும்பாலான தொண்டர்கள் இதைக் கவனத்தில் வைப்பதில்லை. தன்னுடைய நலனுக்காக, கொள்ளைக்காரர் களையும் அயோக்கியர்களையும் தலைவராக ஏற்றுள்ளார்கள். தலைவன் அவர்களுக்கு வாரி வழங்கினால் அவனுக்கு விசுவாசமான தொண்டனாக இருக்கிறார்கள். தலைவன் அவர்களுக்கு வழங்கவில்லை என்றால் அவனைப் பகைக்கிறார்கள்.

நமது நாட்டில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கட்சிகளில் இன்று ஒரு கட்சியில் தொண்டனாக இருப்பவன் நாளை வேறொரு கட்சியில் தொண்டனாக மாறுகிறான். நேற்று வரை தன் தலைவனை போற்றிப் புகழ்ந்தவர்கள் இன்று திட்டிக் கொண்டிருக்கின்றான். தலைவர் நாணயமானவராக இருந்தாலும் தனக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் வெறுக்கிறான். எதிரியாக மாறி அவனைப் பற்றி குறை கூறிக் கொண்டே இருக்கிறான். இது போன்ற சந்தர்ப்பவாதிகள் இந்த ஹதீஸை கவனத்தில் கொள்ளட்டும்.

மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவனுக்குக் கடுமையான வேதனை உண்டு. (அந்த மூவரில் ஒருவன்) அவன் தன் தலைவனிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவன். அவர் கொடுத்தால் திருப்தி அடைந்து கொடுக்காவிட்டால் கோபம் கொள்பவன்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­)நூல்: புகாரீ 2358

தலைவர் மார்க்கத்திற்கு மாற்றமாக நடந்தாலும் கட்டுப்பட வேண்டும் என இந்த ஹதீஸ் தெரிவிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் நியமித்த ஒரு தலைவர் அவர்களின் தொண்டர்களை, கோபத்தில் நெருப்பில் குதிக்க வேண்டும் என்று கட்டளையிட்ட போது இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீங்கள் நெருப்பில் குதித்திருந்தால் மறுமை நாள் வரையிலும் அதிலேயே இருப்பீர்கள் என்று கூறி விட்டு பாவமான விஷயத்தில் கட்டுப்படுதல் இல்லை என்றும் கூறினார்கள். (புகாரீ 7257)

(4) உபரியான தண்ணீரை தர மறுப்பவன்
தன் உபயோகத்திற்கு மேலாக இருக்கும் தனது கிணற்றின் நீரையோ அல்லது குளத்தின் நீரையோ பிறர் பயன்படுத்த விடாமல் தடுத்தவனும் இந்த துர்பாக்கிய நிலையை அடைவான்
மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்... தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போலவே இன்று நான் எனது அருளி­ருந்து உன்னைத் தடுக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­)நூல்: புகாரீ 2369

தண்ணீர் மனிதர்களுக்கு அவசியம் தேவை. தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. வழிப்போக்கர்கள் பயணிகள் போன்றோர்களுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படும். இரக்கம் இல்லாதவர்கள் தான் இது போன்ற செயலைச் செய்வார்கள். அதுவும் எஞ்சிய நீரைக் குடிக்க விடாமல் தடுக்கிறான் என்றால் அவனைப் போன்று கொடிய எண்ணம் உள்ளவன் வேறு யார் இருக்க முடியும்?

தண்ணீர் என்பது நாமாக உருவாக்கும் பொருள் இல்லை. அல்லாஹ்வின் அருளால் நமக்குக் கிடைக்கும் அற்புதமாகும். இந்த அற்புதத்தைப் பிறர் அனுபவிக்க விடாமல் தடுத்தவனுக்கு அல்லாஹ் மறுமையில் தனது அருளைத் தடுத்து விடுவான்.

(5) பெருமைக்காக தரையில் இழுபடுமாறு ஆடையை அணிபவன்
மனிதன் முழுக்க முழுக்க பெருமை கொள்வதற்கு தகுதியற்றவனாக இருக்கின்றான். அவன் தன்னுடைய சொந்த முயற்சியால் தான் எல்லாவற்றையும் பெறுவதாக எண்ணிக் கொண்டிருக் கிறான். அவன் வசதியாக உடல் நலத்துடன் வாழ்வது அல்லாஹ் அவனுக்குப் போட்ட பிச்சை என்பதை மறந்து விடுகின்றான். ஆணவத்துடன்  தனது நடை பாவனைகளை அமைத்துக் கொள்கிறான். நபியாக இருந்தாலும் பெருமை கொள்வதற்கு அனுமதியில்லை.

பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! (அல்குர்ஆன் 17:37)

''யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­,  நூல்: முஸ்­ம் 147

பெருமை என்றால் எது என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல், நம்மை அலங்கரித்துக் கொள்ளாமலும் விரும்பிய அழகிய ஆடைகளை அணியாமலும் இருக்கக் கூடாது. பெருமை எது என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''தமது ஆடை அழகாக இருக்க வேண்டும், தமது காலணி அழகாக இருக்க வேண்டுமென ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில்) சேருமா?'' என்று அப்போது ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ் அழகானவன் அழதையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்'' என்று கூறினார்கள்.அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­),  நூல்: முஸ்­ம் 147

பெருமையோடு ஆடையைத் தரையில் படுமாறு  அணிந்து செல்பவனை அல்லாஹ் மறுமையில் கண்டு கொள்ள மாட்டான். அவர்களுக்குத் தண்டனையையும் வழங்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

''மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான் ''(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர். நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டேன். அதற்கு, ''(அவர்களில் ஒருவர்)தமது ஆடையை தரையில் படுமாறு அணிபவர்....'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூதர் (ர­)நூல்: முஸ்­ம் 171

அரசியல்வாதிகளிடம் இந்த நடைமுறையை நாம் காணலாம். அழகிய வெள்ளை வேட்டியை அணிந்து வரும் இந்த அரசியல்வாதியின் வேட்டி ஊரை பெருக்கிக் கொண்டு வரும். இவ்வாறு இவர்கள் அணிவது பெருமையைக் கவனத்தில் கொண்டு தான். எனவே இதைப் போன்று அணியும் பழக்கத்தை யாரும் மேற்கொள்ளக் கூடாது.

''(முன் காலத்தில்) ஒருவன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கீழே தொங்க விட்டு) இழுத்துக் கொண்டே நடந்த பொழுது (பூமி பிளந்து அதில்) அவன் புதைந்து போகும் படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டே இருப்பான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ர­), நூல்: புகாரீ 3485

(6) செய்த உதவியை சொல்­க் காட்டுபவன்
பிறருக்குத் தான் செய்த உதவியை சொல்­க் காட்டுபவனை அல்லாஹ் பார்க்க மாட்டான். அவனிடம் பேச மாட்டான். அவனைப் பாவத்தி­ருந்து தூய்மைப்படுத்தவும் மாட்டான்.

நம் சமுதாயத்தில் உதவி செய்யும் நபர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். அதிலும் தான் செய்த உதவியை சொல்­க் காட்டாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு தான். உதவி செய்யாதவனை விட, உதவி செய்து விட்டு அதைச் சொல்­க் காட்டுபவன் அதிக குற்றத்திற் குரியவன்.

''மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான் ''(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டேன். அதற்கு, ''தமது ஆடையை (பெருமைக்காகக்) கீழே இறக்கிக் கட்டியவர்; (செய்த உபகாரத்தை) சொல்­க் காட்டுபவர்; பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூதர் (ர­)நூல்: முஸ்­ம் 171

தான் உதவி செய்தது பிறருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக, செய்த உதவியைச் சொல்­க் காட்டுபவன் கோடி கோடியாக அள்ளித் தந்தாலும் அவனுக்கு அணு அளவு கூட நன்மை கிடைக்காது, இதற்கு அல்லாஹ் குர்ஆனில் தெளிவான உதாரணத்தைக் கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடு பவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்­க் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:264)

ஒரு வழவழப்பான பாறையில் மண் படிந்திருக்கிறது. அந்தப் பாறையின் மீது மழை நீர் விழும் போது பாறையின் மீதுள்ள மண் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டு, சிதறி காணாமல் போய் விடும். பாறையின் மீது சிறிய மண் துகளைக் கூட காண முடியாது. இது போன்று பிறர் பார்ப்பதற்காகத் தர்மம் செய்தவனின் செயல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடுகிறது. சிறிது கூட நன்மை கிடைக்காது. இதையே அல்லாஹ் இந்த உதாரணத்தின் மூலம் விளக்குகின்றான்.

தான் செய்த உதவியை சொல்­க் காட்டாதவர்களுக்குத் தான் நன்மை உண்டு என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்­க் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூ­ அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:262)

அல்லாஹ் குர்ஆனில் சொர்க்க வாசிகளின் சில பண்புகளைச் சுட்டிக் காட்டுகிறான். அவர்கள் யாருக்கு உதவி செய்வார்களோ அவர்களிடத்தில் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்பதற்காக உதவாமல் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதற்காகவே உதவுவார்கள் என்று கூறுகின்றான்.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள். ''அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர் பார்க்கவில்லை'' (என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் 76:8)

(7) விபச்சாரம் செய்யும் முதியவன்
பொதுவாக வயோதிகம் என்பது அனைத்தையும் அனுபவித்து ஆசை உணர்வுகள் எல்லாம் அடங்கி விட்ட நிலையாகும். ஒரு வா­பனுக்கு இருக்கும் ஆசை வயோதிகனுக்கு இருக்காது. அவனைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவனிடத்தில் அதிகமாகவே இருக்கும். இந்தக் கால கட்டத்தில் அவன் விபச்சாரம் செய்வது அல்லாஹ்வின் பயம் இல்லாமல் துணிந்து பாவம் செய்வதைக் காட்டுகிறது. எனவே தான் அல்லாஹ் இவனுக்கு இந்தத் தண்டனையை வழங்குகிறான்.

இளைய வயதினர் விபச்சாரம் செய்தாலும் அவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு. ஆனால் வயது முதிர்ந்த நிலையில், விபச்சாரம் செய்வதற்குத் தகுதியற்ற நிலையில், தவிர்ந்து கொள்ள முடியும் என்ற நிலையில் இந்தப் பாவத்தைச் செய்வதால் கடும் தண்டனை விபச்சாரம் செய்யும் முதியவனுக்கு கிடைக்கிறது.

''மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். (அவர்களில் ஒருவன்) விபச்சாரம் செய்யும் கிழவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­)நூல்: முஸ்­ம் 156

ஒரு முஸ்­ம் விபச்சாரம் செய்யும் நேரத்தில் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகின்றான். அந்நேரத்தில் அவனுக்கு மரணம் சம்பவித்தால் காஃபிராக இருக்கும் நிலையிலே அவன் மரணிக்கின்றான். அவன் முன்பு ஈமான் கொண்டதற்கு எந்தப் பலனும் இருக்காது.

காலமெல்லாம் பாவியாக இருந்து விட்டு மரண வேளையில் திருந்தி சொர்க்கத்திற்குச் செல்லும் மனிதர்களும் இருக்கிறார்கள். காலமெல்லாம் நல்லமல்களைச் செய்து விட்டு இறுதி நேரத்தில் பாவியாக மரணிக்கும் துர்பாக்கியவான்களும் உண்டு.

நமது இறுதி நிலையே நம்மை சுவர்க்கவாதியாகவோ அல்லது நரக வாதியாகவோ நிர்ணயிக்கிறது. ஆக இந்தக் கொடிய பாவத்தி­ருந்து நம்மைக் காத்துக் கொள்வது நமது முதல் வேலையாக இருக்க வேண்டும்.

''விபச்சாரம் செய்பவன், விபச்சாரம் புரியும் போது முஃமினாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும் மது அருந்தும் போது ஒருவன் முஃமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகின்ற போது முஃமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க (பிறரது பொருளை அபகரித்து) கொள்ளை யடிக்கும் போது முஃமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­)  நூல்: புகாரீ 2475

(8) பொய் சொல்லும் அரசன்
சிறிய சிறிய விஷயங்களுக்கு எல்லாம் இன்று நாம் சாதாரணமாக பொய் சொல்கின்றோம். நல்ல வார்த்தைகளைக் கூறுவதைப் போல் பொய்களை அள்ளி வீசுகின்றோம். நாம் பேசும் பேச்சில் உண்மைகளை விடப் பொய்யே மிகைத்திருக்கிறது. இதை நாம் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஆனால் இவ்வாறு பொய் சொல்வது நயவஞ்சகர்களின் குணம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

''நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய்யையே பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். அவனை நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­) நூல்: புகாரீ 33

நாம் சொல்லும் பொய்கள் நம்மை நரகத்திற்குக் கொண்டு சென்று விடும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

''உண்மை நிச்சயமாக நன்மைக்கு வழி காட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழி காட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளராக ஆகி விடுவார். பொய் நிச்சயமாக தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யர் எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­),  நூல்: புகாரீ 6094

சாதரண மக்களே பொய் சொல்லக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்.
ஒரு நாட்டின் அரசன் குடி மக்களில் யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் குளிர வைத்து காரியம் சாதிக்க வேண்டிய நெருக்கடியும் அவனுக்குக் கிடையாது. அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் அவன் பொய் சொல்லத் தேவையில்லை.
இந்நிலையில் அவன் பொய் சொல்வது, பொய் சொல்வதில் அவனுக்கு அதிகம் துணிவு இருப்பதைக் காட்டுகிறது. பல நிர்ப்பந்தங்கள் உள்ள சாதாரண மக்கள் கூட பொய் சொல்லக் கூடாது என்றிருக்கும் போது, எந்த நிர்ப்பந்தமும் இல்லாத ஓர் அரசன் பொய் சொல்வது அதிக குற்றமாக உள்ளது. இந்தக் காரணத்தால் இவனும் இந்த மோசமான நிலையை அடைகின்றான்.

''மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். (அவர்களில் ஒருவன்) பொய் கூறும் அரசன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­)நூல்: முஸ்­ம் 172

(9) பெருமையடிக்கும் ஏழை
பொதுவாக தற்பெருமை கொள்வதற்குக் காரணமாக அமைவது செல்வாக்கு தான். அந்தச் செல்வாக்கு இல்லாத ஏழை தற்பெருமை கொள்கின்றான் என்றால் அவன் வறட்டு கவுரவம் கொள்கின்றான் என்றே பொருள். ஆக, சந்தர்ப்ப சூழ்நிலையைக் கூட காரணம் காட்ட முடியாத இவன் இப்பாவத்தில் ஈடுபடுவதற்குக் காரணம், அல்லாஹ் விஷயத்தில் அவனுடைய அலட்சியப் போக்கு தான். எனவே இவன் மீதும் அல்லாஹ் கோபம் கொள்கிறான்.

''மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.  பெருமையடிக்கும் ஏழை (அவர்களில் ஒருவன்)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­)நூல்: முஸ்­ம் 172